வாக்களித்துவிட்டு தன்னை தானே புகைப்படம் எடுத்துக்கொண்ட மோடி

புதன், 30 ஏப்ரல் 2014 (11:35 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏழாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மத்தியில் தாய் - மகன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 
9 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏழாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 89 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. 
சோனியா காந்தி, அத்வானி  உள்பட பல மூத்த தலைவர்கள் போட்டியிடும் 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.  குஜராத் மற்றும் பஞ்சாப்  போன்ற மாநிலங்கள் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் இன்று காலை 9 மணியளவில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தனது வாக்கை பதிவு செய்தார்.
 
வாக்களித்தது குறித்து தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில், "அத்வானியின் தொகுதியில் வாக்களிப்பதை மிகப்பெரிய ஆசியாக கருதுகிறேன்" என பதிவு செய்தார்.
 
 

அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களித்த மையுடன் தன்னை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, ' மத்தியில் தாய் - மகன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. இந்த வாக்குபதிவு மத்தியில் பாஜக நிலையான ஆட்சி அமைக்க உதவும். 
நான் தேசத்துக்கு உள்ள அச்சுறுத்தலை போக்க நினைக்கிறேன். ஆனால் காங்கிரஸ் கட்சி என்னை அகற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. குஜராத் மக்களுக்கு நன்மை செய்துள்ளது போல் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காகவே தேர்தலில் வாக்களித்துள்ளேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. இனியும் என்னை ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன். தேர்தலில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும்.வாக்காளர்கள் வாக்களிக்கும் போது, நிர்பயா சம்பவம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் போன்றவற்றை பற்றி சிந்திக்க வேண்டுமென மோடி பேசினார். 
 
நரேந்திர மோடி காந்திநகரில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவரது கையில் தாமரைச் சின்னத்தை வைத்துக்கொண்டு பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்