பண பற்றாக்குறையை போக்க விரைவில் மைக்ரோ ஏடிஎம்!!

திங்கள், 14 நவம்பர் 2016 (17:24 IST)
விரைவில் மைக்ரோ ஏடிஎம் வசதி ஏற்படுத்தப்படும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

\
 
 
கருப்பு பணம் மற்றும் கள்ளப் பணத்தை மீட்கும் நடவடிக்கையாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை நவம்பர் 9-ம் தேதி முதல் மத்திய அரசு வாபஸ் பெற்றது. 
 
இந்நிலையில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
 
இதனிடையே இந்த ரூபாய் நோட்டு பற்றாக்குறை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகந்த தாஸ், இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் விரைவில் மைக்ரோ ஏடிஎம் வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலமாக பணப்பற்றாக்குறை விரைவில் சீரடையும் என்று கூறினார்.
 
மைக்ரோ ஏடிஎம்:
 
இது சிறிய வடிவிலான (point of sale) ஆன்லைன் வங்கிச் சேவையாகும். இந்த மைக்ரோ எடிஎம்-ஐ எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லாம். 
 
இந்த சேவையின் மூலமாக வங்கி கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் பணம் எடுத்துதல், பணத்தை வங்கி கணக்கில் செலுத்துதல், கடன் வாங்குதல், கடன் வசூலித்தல் போன்ற பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள இயலும். 
 
இந்த சேவை மிகவும் பாதுகாப்பானது.
 
எப்படி பயன்படுத்துவது?
 
இந்த மைக்ரோ ஏடிஎம் மூலம் பண பரிமாற்றம் மேற்கொள்ள வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது ஆதார் எண், மொபைல் எண்ணை வங்கி கணக்கில் இணைப்பதன் மூலமாக பணப்பரிமாற்றத்தை எளிதாக மேற்கொள்ளலாம். 
 
இவ்வாறு மேற்கொள்ளப்படும் பண பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு உரிய ரசீது வழங்கப்படும். 

வெப்துனியாவைப் படிக்கவும்