எம்பிஏ மார்க்கெட்டிங் பட்டதாரி: சொகுசு கார்களை திருடி மார்க்கெட்டிங் பிஸ்னஸ்

சனி, 17 செப்டம்பர் 2016 (13:00 IST)
மும்பையில், நட்சத்திர ஓட்டல்களில் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடிய எம்பிஏ பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 
கடந்த மாதம் 26ந் தேதி மும்பையை சேர்ந்த அர்ஜுன் கார்க் என்பவர் அங்குள்ள ஹாலிடே இன் ஓட்டலில் இரவு உணவு சாப்பிட சென்றிருக்கிறார். தனது ஆடி க்யூ7 சொகுசு காரின் சாவியை ஓட்டலின் வாலட் பார்க்கிங் பணியாளரிடம் கொடுத்துவிட்டு ஓட்டலுக்குள் சென்றிருக்கிறார்.
 
சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து கார் சாவியை கேட்கும்போது, வாலட் பார்க்கிங் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கார் சாவியை காணவில்லை. இதையடுத்து, கார் காணாமல் போனது குறித்து அர்ஜுன் கார்க் போலீசில் புகார் அளித்தார்.
 
ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் போலீஸ் விசாரணையில் இறங்கினர். அப்போது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் செல்போனில் பேசியபடியே, வாலட் பார்க்கிங் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அந்த கார் சாவியை எடுத்துச் செல்வது தெரிய வந்தது.
 
விசாரணயை தீவிரப்படுத்திய போது, ஹயாத் ரெசிடென்ஸி ஓட்டலில் கார் திருடும் நபர் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த ஓட்டலை சுற்றிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
 
அப்போது, அங்கு வந்த ஆடி கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அந்த கார் திருடு போன அர்ஜுன் கார்க்கின் கார் என்பது உறுதியானது. இதையடுத்து, காரை ஓட்டி வந்த சதேந்திரா சிங் ஷெகாவத் [35] என்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதில், காரை அவர்தான் திருடிச் சென்றது சதேந்திராதான் தெரிய வந்தது. அவரிடமிருந்து அந்த ஆடி க்யூ7 காரும் மீட்கப்பட்டது.
 
அவரிடம் நடத்திய விசாரணையில், மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கும் சதேந்திரா தனது திறமையை கார்களை திருடி விற்பனை செய்வதில் ஆர்வம் செலுத்தி இருக்கிறார்.
விலை உயர்ந்த உடைகள், காலணிகள் சகிதம் நுனி நாக்கு ஆங்கிலத்துடன் மும்பையில் உள்ள பிரபல ஓட்டல்களுக்கு டிப் டாப்பாக சென்றுள்ளார். இதனால், ஓட்டல் பணியாளர்களுக்கு சந்தேகம் வரவில்லை.
 
வாலட் பார்க்கிங் பணியாளர்களிடம் சென்று பேச்சுக் கொடுத்து கவனத்தை திசை திருப்பி, அங்கு மேஜையிலோ அல்லது சிறிய பீரோவிலோ வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த கார்களின் சாவிகளை எடுத்துக் கொண்டு, நேராக பார்க்கிங் பகுதியில் நிற்கும் காரை திருடி உள்ளார். 
 
ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை சதேந்திரா திருடியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பை மட்டுமின்றி, புனே, குர்கான் ஆகிய நகரங்களிலும் விலை உயர்ந்த கார்களை இவர் திருடியது தெரியவந்துள்ளது.
 
திருடப்பட்ட கார்களை ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களை சேர்ந்த போதை மருந்து கடத்தல் கும்பல்களிடம் விற்பனை செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்