ஆளும் பாஜக வுக்கு எதிராக காங்கிரஸ் திரட்டியுள்ள மெகாக் கூட்டணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இருக்கிறார். மேலும் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி வருபவர்களில் முக்கியமானத் தலைவராகவும் இருக்கிறார். ஆளும் பாஜக அரசை பாஸிஸ அரசாங்கம் எனவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தேர்தலுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் பாஜக வின் பலத்தை நிரூபிக்க 200 இடங்களில் கூட்டம் நடத்த பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதில் பாஜக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றன. அந்த வகையில் நேற்று வடக்கு தினஜ்பூரில் பாஜக வின் பேரணி நடக்க இருந்தது. அதில் கலந்துகொள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்ள தனி ஹெலிகாப்டர் மூலம் வர இருந்தார்.
ஆனால் ஹெலிபேட் பழுதுபார்த்தல் பணியைக் காரணம் காட்டி ஹெலிகாப்டர் தரையிரங்க முடியாது என மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. இதனால் யோகி அந்த பேரணியில் தொலைபேசி மூலம் உரையாடினார். யோகிக்கு அனுமதி மறுக்கப்பட்ட இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இது சம்மந்தமாக பிரதமர் மோடி மம்தாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.