ரயில்வே பட்ஜெட்: ஒரு மாதத்தில் மோடி அரசின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது - மம்தா

புதன், 9 ஜூலை 2014 (09:10 IST)
ஒரு மாதத்தில் மோடி அரசின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது என்று முன்னாள் ரயில்வே அமைச்சரும், மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். 
 
மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது:-
 
தேர்தலுக்கு முன்பு பாஜகவினர் எவ்வளவோ வாக்குறுதி அளித்தனர். ஒரு மாதத்தில் அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. பாதுகாப்பு, ரயில்வே போன்றவற்றில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதாக தேர்தலுக்கு முன்பு சொல்லாமல், இப்போது ஏன் சொல்கிறார்கள்? பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும்.
 
பதவி ஏற்ற ஒரு மாதத்துக்குள்ளேயே ரயில் கட்டணத்தை 14.2 சதவீதம் உயர்த்தினர். இப்போது, டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணம் உயரும் என்று அறிவித்துள்ளனர். இதன்மூலம், எத்தகைய அரசை தேர்ந்தெடுத்துள்ளோம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்குத்தான் நான் கூட்டாட்சி முன்னணி அரசு அமைய வேண்டும் என்று கூறினேன்.
 
பாஜக அரசு, மேற்கு வங்காளத்தை பழிவாங்கும் மனப்பான்மையுடன் அணுகுகிறது. ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்காளம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்துக்கு ஒரே ஒரு வாராந்திர ரயில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. எங்களை புறக்கணித்தால், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.
 
நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல, எங்கள் உரிமைகளுக்காக போராடுவோம். சமரசம் செய்து கொள்ள மாட்டோம். அந்த ஒரு ரயிலையும் வாபஸ் பெற்று விடுங்கள்.
 
என் இதயம் கொந்தளிக்கிறது. நல்லவேளை, நான் மக்களவையிலோ, மேல்-சபையிலோ இப்போது உறுப்பினராக இல்லை. அப்படி இருந்திருந்தால், அங்கு என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.
 
இத்தகைய புறக்கணிப்பையும், அவமதிப்பையும் இதற்கு முன்பு நாடு கண்டதுண்டா? முந்தைய காங்கிரஸ் அரசு, எங்களுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்தது. இப்போதைய அரசு, ரயில் திட்டங்களை அறிவிக்காமல் புறக்கணிக்கிறது என்று மம்தா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்