ஏர் இந்தியாவின் மகாராஜா சின்னத்தை மாற்ற நரேந்திர மோடி யோசனை

திங்கள், 23 ஜூன் 2014 (15:01 IST)
ஏர் இந்தியாவின் மகாராஜா சின்னத்துக்கு பதிலாக சாதாரண மனிதனின் சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என விமானப்போக்குவரத்து துறை அமைச்சருக்கு பிரதமர் நரேந்திரமோடி யோசனை தெரிவித்துள்ளார்.
 
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானநிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தற்போது ரூ.49 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக கூறப்படுகிறது.
 
இதற்கிடையில் இந்திய விமானநிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை என அமெரிக்க விமானபோக்குவரத்து கட்டுப்பாட்டு துறை அண்மையில் குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில் இந்திய விமான போக்குவரத்து துறையை மேம்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் விமான போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி ராஜு நேற்று ஆலோசனை நடத்தினார்.
 
அப்போது ஏர் இந்தியாவின் மகாராஜா சின்னத்தை சாதாரண மனிதனாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி யோசனை வழங்கினார். மேலும் விமான நிலையங்களில் சோலார் எரிசக்தி திட்டங்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
 
பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் எனவும் விமானநிலையங்களில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பாதுகாப்புக்கு மட்டும் பயன்படுத்தாமல், விமானநிலையங்களை சுத்தமாக வைத்திருக்கவும், கஸ்டம்ஸ் மற்றும் குடியேற்ற துறை சேவைகளை கண்காணிக்கவும் பயன்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார். ஏர் இந்தியாவை நஷ்டத்தில் இருந்து மீட்க வரிச்சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி, மோடியிடம் கோரிக்கை வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்