புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் மகாராஷ்டிர தேர்தலில் வெற்றி

திங்கள், 20 அக்டோபர் 2014 (12:39 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ச்செல்வன் என்பவர் மகாராஷ்டிர மாநிலத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ராமையா, தங்கம் தம்பதியருக்கு பிறந்த 6  மகன்களின் மூத்தவர் ஆர்.தமிழ்ச்செல்வன். இவர் கடந்த 35 ஆண்டுகளாக  மும்பையில் தனது 4 சகோதரர்களுடன் வசித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக பாஜகவின் நகரப் பொதுச்செயலராக பதவி வகித்து வந்த நிலையில், இவருக்கு அக்கட்சித்தலைமை  சியோன்கோலிவாடா தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது.
 
இதையடுத்து நேற்று (19.10.2014) வெளியான தேர்தல் முடிவுகளில் இவர் வென்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். ரயில்வே சரக்கு கையாளும் ஒப்பந்ததாரராகத் தொழில் செய்து வரும் இவருக்கு மனைவி கமலா, மகாலெட்சுமி(22), வைஷாலி (19) ஆகிய மகள்களும் உள்ளனர். இவரது சகோதர்கள் மோகன், சந்திரபோஸ் ஆகியோர் தொழிலுக்கு உதவியாக உள்ளனர். மற்றொரு சகோதரர்களில் முருகன் மும்பையில் கராத்தே மாஸ்டராகவும், நேரு மதுரையில் போதைத்தடுப்பு உளவுப்பிரிவின் துணை கண்காணிப்பாளராகவும், ஆர்.ஜீவானந்தம் புதுக்கோட்டையில் வழக்குரைஞராகவும் உள்ளனர்.
 
இது குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட பாஜகவினரும், அவரது சொந்த கிராமத்தினரும் உற்சாகமாக பட்டாசு வெடித்துக்கொண்டாடினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்