8 நிறுவனங்களின் நூடுல்ஸ் தரமானதாக இல்லை: பரிசோதனையில் கண்டுபிடிப்பு

திங்கள், 15 ஜூன் 2015 (11:22 IST)
மேகி நூடுல்சைத் தொடர்ந்து மேலும் 8 நிறுவனங்களின் நூடுல்ஸ் தரமானதாக இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.


 

 
இந்தியாவில் நெஸ்லே நிறுவனம் தயாரித்த மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளில் அதிக ரசாயன கலப்பு இருப்பதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனால், மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் பாக்கெட்டுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் அனைத்து வகை உணவுப் பொருட்களையும் பரிசோதிக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவின் பேரில்,  நாடெங்கும் உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. நூடுல்ஸ் வகைகளில் 12 நிறுவனங்களின் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சோதிக்கப்பட்டன.
 
டெல்லியில் நடந்த ஆய்வில் 12 வகை நூடுல்சில் 8 நிறுவனங்களின் நூடுல்ஸ்களில் அதிக ரசாயன கலப்பு இருப்பதும் மற்றும் அவை தரம் இல்லாததாக இருப்பதும் தெரியவந்தது.
 
இதையடுத்து இந்த உணவுப் பொருட்களை தடை செய்வது பற்றி டெல்லி மாநில அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் பாக்கெட் உணவு வகைகளில் சிலவற்றை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதற்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில் நெஸ்லே நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியாக மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்