நாடாளுமன்ற தேர்தல்: அஸ்ஸாம், திரிபுராவில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு

ஞாயிறு, 6 ஏப்ரல் 2014 (17:18 IST)
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில் முதற்கட்டமாக அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் உள்ள ஆறு தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு   நடைபெறுகிறது. 
 
நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு 9 கட்டமாக நடத்தப்படும்  நாடாளுமன்ற தேர்தலில் 81.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 
 
தேர்தலில் முதற்கட்டமாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேஸ்பூர், காலியாபோர், ஜோர்ஹட், திப்ருகார், லக்கிம்பூர் ஆகிய 5 தொகுதிகளிலும், திரிபுராவில், திரிபுரா மேற்கு தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
 
இம்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வழக்கமான வாக்குப்பதிவு நேரத்தைவிட கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு இடைவிடாமல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் 6 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 
 
அஸ்ஸாமில் காங்கிரஸ், பாஜ , திரிணாமூல் காங்கிரஸ், அஸ்ஸாம்  கனபரிஷத், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, அகில இந்திய பார்வர்டு பிளாக் என பல கட்சிகள் போட்டியிடுவதால் பலமுனை போட்டி நிலவுகிறது.
 
திரிபுராவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ என பலமுனை போட்டி நிலவுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்