கர்நாடகாவில் ஆட்சி கவிழ்கிறதா? முதலமைச்சர் பரபரப்பு விளக்கம்

திங்கள், 14 ஜனவரி 2019 (16:04 IST)
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல் குறித்து பரவிய வதந்தி பற்றி முதலமைச்சர் குமாரசாமி விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக குமாரசாமி பதவியேற்றார்.
 
104 தொகுதிகளில் வென்ற பாஜக, எப்போது வேண்டுமானாலும் குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
 
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் பாஜகவுக்கு தாவவிருப்பதாகவும் இதனால் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து என்றும் கூறப்பட்டது.
 
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள முதலமைச்சர் குமாரசாமி, எங்கள் அணியில் எந்த குழப்பமும் இல்லை. சொந்த வேலையாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மும்பை சென்றுள்ளார்கள். எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென பாஜக நினைக்கின்றது. ஆனால் அது ஒரு போதும் நடக்காது. எவ்வளவு முயன்றாலும் பாஜகவால் ஒருபோதும் அது முடியாது என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்