முத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்: முகநூல் ஆர்வலர்கள் மீண்டும் அறிவிப்பு

வெள்ளி, 28 நவம்பர் 2014 (13:58 IST)
பெங்களூருவில் "அன்பு முத்தம்" போராட்டம் திட்டமிட்ட தேதியில் நடைபெறும் என்று முகநூல் ஆதரவாளர்கள் மீண்டும் அறிவித்துள்ளனர்.
 
கேரள மாநிலத்திலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில், கடந்த மாதம் நடன நிகழ்ச்சி நடந்தது. அதில், கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை பாஜகவினர் விரட்டி அடித்தனர். இதனால் பாஜக தொண்டர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
 
இதனைக் கண்டித்து 'அன்பின் முத்தம்' என்ற முத்தம் கொடுக்கும் அமைப்பு தொடங்கப்பட்டது. இவர்கள், பொது இடங்களில் கூடி ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தப் போவதாக அறிவித்தனர். இதனால் கடந்த 2ஆம் தேதி கொச்சியில் இந்த அமைப்பினர் கூடி ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொண்டனர்.
 
மேலும் சில நாட்களுக்கு முன்பு, மும்பை ஐஐடியிலும், சென்னை ஐஐடியிலும் மாணவ, மாணவிகள் 'அன்பின் முத்தம்' அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து முத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 
 
இந்நிலையில், பெங்களூருவில் கடந்த 22ஆம் தேதி முத்தப் போராட்டம் நடத்தப் போவதாக மனித‌ உரிமை ஆர்வலர் ரெய்சிடா தனஞ்சே அறிவித்திருந்தார். இந்த முத்தப் போராட்டத்திற்கு மாநகர் காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி, 'முத்தப் போராட்டம் நடத்துவதற்கான நோக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. பொது இடத்தில் முத்தமிடுவது இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது. இதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும்' என்று கூறி அனுமதி மறுத்திருந்தார்.
 
இந்நிலையில் தற்போது முகநூல் ஆதரவாளர்கள் இணையத் தளங்களில் தங்களின் கருத்தை மீண்டும் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளனர். அதில், "பெங்களூருவில் வரும் 30ஆம் தேதி 'அன்பின் முத்தம்' நடத்துவது குறித்துக் கூடுதல் காவல் துறை ஆணையரைச் சந்தித்தோம். ஆனால் போராட்டம் நடத்தக் கூடாது என எவ்விதக் கடிதமும் காவல் துறையினரிடம் இருந்து எங்களுக்கு வரவில்லை.
 
ஆனால் போராட்டம் குறித்து நாங்கள் எந்த விவரமும் போலீசாருக்குக் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். நாங்கள் போராட்டம் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் என அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளோம். இதனால் திட்டமிட்டப்படி வருகிற 30ஆம் தேதி 'அன்பு முத்தம்' போராட்டம் நடக்கும்“ என்று தங்கள் முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்