ஆள்கடத்தல் உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது : ராஜ்நாத் சிங்

புதன், 7 அக்டோபர் 2015 (21:29 IST)
ஆள்கடத்தல் சம்பவங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, அது உலகளாவிய பயங்கர பிரச்ச்னையாக உருவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
தலைநகர் டில்லியில், மனிதக் கடத்தல், தடுப்பு தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இதில், கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மனிதக் கடத்தல் இந்தியாவில் மட்டும் அல்ல, அது உலகளாவிய பயங்கர பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
 
மேலும் அவர் பேசியபோது “ஆள்கடத்தல் சம்பவங்களை நாகரிகமுள்ள எந்த சமுதாயமும் ஏற்றுக் கொள்ளாது. மனிதக் கடத்தல் சம்பவங்களை தடுக்க, உள்துறை அமைச்சகம் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டம், பயனுள்ளதாக அமைந்துள்ளது. பல்வேறு அரசு அமைப்புகளின் ஒத்துழைப்புடன், மனிதக்கடத்தல் தடுப்பு பிரிவுகளை மேலும் வலிமைப்படுத்த, உள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
 
கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு புனர் வாழ்வு அளிப்பது, முக்கியமான பணி. இதில், அரசு சாரா அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சேர்ந்து செயல்பட வேண்டும். மனிதக் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் பற்றிய தகவல்களை திரட்டும் பணியில், சி.சி.டி.என்.எஸ்., எனப்படும், குற்றம் கண்டறியும் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
 
மனிதக் கடத்தலை தடுக்கும் நோக்கில் வங்கதேசத்துடன், சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நேபாளத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்” என்று பேசினார்.
 
மேலும், தெற்காசியாவில், ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பேர் கடத்தப்படுவதாக ஐநா-வின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்