’விவசாயியின் தற்கொலை முயற்சிக்கு மோடியே காரணம்’ - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதன், 22 ஏப்ரல் 2015 (18:26 IST)
பேரணியில் கலந்துகொண்ட விவசாயியின் தற்கொலை முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
 
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்திரில் கண்டன கூட்டமும் பேரணியும் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொள்ள கெஜ்ரிவால் வந்த சிறிது நேரத்தில், விவசாயி ஒருவர் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
 

 
அவரை கூட்டத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தனது நிலமும் பயிரும் அழிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.
 
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த விவசாயி, உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆத்திரடைந்த விவசாயிகள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 
அப்போது கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், ”தற்கொலைக்கு முயன்ற விவசாயியை காப்பாற்ற டெல்லி காவல் துறையினர் முயற்சி செய்யவில்லை. டெல்லி காவல் துறையினர் எனது கட்டுப்பாட்டில் இல்லாததால் நான் கூறுவதை அவர்கள் கேட்பதில்லை.
 
மோடி தலைமையிலான பாஜக அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்து விட்டனர். இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டு ஆகி என்ன செய்தது? விவசாயிகளுக்கு எதிராகவே மோடி அரசு செயல்படுகிறது. பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குவதற்கே மோடி அரசு செயல்படுகிறது.
 
மோடி விவசாயிகளின் நிலங்ளை எடுக்க நினைக்கிறார். பாஜக அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவே இது போன்ற தற்கொலைகளுக்கு காரணம். இந்த மசோதாவிற்கு எதிராக விவசாயிகள் ஒன்று சேர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்