ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு நீதிபதி பரிந்துரை

திங்கள், 18 மே 2015 (15:35 IST)
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு, அவருக்கு 4 வருட சிறைதண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. அதேபோல், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாரகன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபரதாமும் விதித்தது.
 
பின்னர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, நீதிபதி லோக்கூர், சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த வழக்கில் இம்மாதம் மே - 11ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை முழுமையாக விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்து உத்தரவிட்டார். மேலும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டது. இதுதவிர, ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.
 
இந்நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி ரவீந்தராவ் வர்மா பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து கர்நாடக அரசு என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்