கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம்

செவ்வாய், 14 ஏப்ரல் 2015 (16:00 IST)
கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரேந்திர ஹீராலால் வகேலா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரேந்திர ஹீராலால் வகேலா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒடிஷா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வகேலா அப்பழுக்கற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை அளித்திருக்கிறார்.
 
அடுத்த சில மாதங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறவுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு சில மாதங்கள் மட்டும் பணியாற்றுவதற்காக இன்னொரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது முறை இல்லை. வகேலா இப்போது 62 நீதிபதிகளைக் கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.
 
இவரை இடமாற்றம் செய்ய வேண்டுமானால் இதைவிட பெரிய உயர் நீதிமன்றங்களில் ஒன்றுக்குத்தான் மாற்ற வேண்டும். அதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு ஆகும். ஆனால், 27 நீதிபதிகள் மட்டுமே உள்ள ஒடிஷா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வகேலா இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த இடமாற்றத்துக்கும் நீதிபதி வகேலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதையும் மீறி அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது நியாயமான நடவடிக்கையாக தோன்றவில்லை. எனவே, வகேலாவின் இடமாற்றத்தை ரத்து செய்து அவருக்கு பதவி உயர்வு வரும் வரை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரச் செய்ய  வேண்டும். இவ்வாறு ராமாஸ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்