'ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு உறுதி' - கர்நாடக அரசு முடிவு

திங்கள், 1 ஜூன் 2015 (13:29 IST)
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது.
 
சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் கடந்த மே 11ஆம் தேதி ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
 
மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு ஆலோசித்து வந்தது. கடந்த 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசு தலைமை வக்கீல் ரவிவர்ம குமார் கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற கர்நாடகா அமைச்சரவை கூட்டத்தில், ஜெயலலிதாவின் வழக்கை மேல்முறையீடு செய்ய கர்நாடகா அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மேற்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திரா தெரிவித்தார்.
 
மேலும், மேல்முறையீடு செய்யும் தேதி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்