நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழி கௌரி லங்கேஷை இந்துத்வாவாதி ஒருவர் சுட்டுக்கொன்றதில் இருந்து தீவிரமாக அரசியல் பேசி வருகிறார். அதிலும் பாஜக வையும் இந்துத்வா அரசியலையும் சங்பரிவார் அமைப்புகளையும் எதிர்த்து பல்வேறு அரசியல் கூட்டங்களில் கடுமையாகப் பேசி வருகிறார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த மாணவர் அமைப்புப் போராட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். இதனால் பிரகாஷ்ராஜ் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் அவ்வப்போது எழுந்தன.
இதையடுத்து புத்தாண்டு அன்று தனது அரசியல் வருகையை உறுதி செய்தார் பிரகாஷ்ராஜ். மேலும் மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாகவும் தன்னை மதச்சார்பற்ற கட்சிகள் யாவும் பொது வேட்பாளராக அறிவித்து ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளித்துள்ளது. பெங்களூர் மத்திய தொகுதி காங்கிரஸ் கட்சி அதிகமாக வாக்கு வங்கி வைத்துள்ள தொகுதிகளில் ஒன்று. அதனால் காங்கிரஸின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் பிரகாஷ் ராஜின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் கட்சி பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு அளிக்க ஒரு நிபந்தனை விதித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில் ‘‘பிரகாஷ் ராஜ் வைத்துள்ள கோரிக்கை குறித்து எங்கள் நிர்வாகிகளுடனும் கட்சித்தலைமையுடனும் ஆலோசனை நடத்தினோம். அவர் காங்கிரஸில் இணையும் பட்சத்தில் பெங்களூரு தொகுதியை அவருக்கு வழங்குவது குறித்து பரிசீலிப்போம்’’ எனக் கூறினார்.