பிடி வாரண்ட் கொடுத்த நீதிமன்றத்திடமே இழப்பீடு கேட்ட நீதிபதி!

சனி, 18 மார்ச் 2017 (09:41 IST)
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த பிடி வாரண்டை ஏற்க மறுத்த நீதிபதி கர்ணன், வாரண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தனக்குமன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக உச்சநீதிமன்றம் ரூ. 14 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


 

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு, உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிடி வாரண்ட் பிறப்பித்து, கடந்த மார்ச் 10-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

கைது வாரண்ட்டை மேற்கு வங்க காவல்துறை டிஜிபி, நீதிபதி கர்ணனிடம் நேரில் வழங்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு, உச்சநீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில காவல்துறை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் உட்பட 20 பேர் கொண்டகுழு, உச்சநீதிமன்ற வாரண்ட்டை நீதிபதி கர்ணனிடம் அளிப்பதற்காக, வெள்ளிக்கிழமையன்று அவரது இல்லத்திற்குச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து, நீதிபதி கர்ணன் வாரண்ட்டை ஏற்றுக் கொண்டதாக ஏடிஜிபி ராஜேஷ் குமார் கூறினார். ஆனால், ஏற்கனவே கூறியபடி வாரண்டை ஏற்க நீதிபதி கர்ணன் மறுத்து விட்டதாக அவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதனிடையே நீதிபதி சி.எஸ்.கர்ணன் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கையால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு இழப்பீடாக ரூ. 14 கோடி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்