மோடி, அமித்ஷா உருவபொம்மை எரிப்பு : மாணவர் அமைப்பு மீது விசாரணை

வியாழன், 13 அக்டோபர் 2016 (21:16 IST)
புதுடெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோரின் உருவபொம்மைகளை எரித்து தசரா கொண்டாடியது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
 

 
வடநாட்டில் ராவணனை எரிப்பதாக ராம் லீலா என்ற பெயரில் தசரா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் ராவண லீலா என்ற பெயரில் ராமனை எரித்து விழா கொண்டாடப்படுவதும் உண்டு.
 
இந்நிலையில் காங்கிரஸ் சார்பு மாணவர் சங்கத்தினர் (என்.எஸ்.யு.ஐ.), தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை ராவணனாகச் சித்தரித்து, கடந்த செவ்வாயன்று அவர்களின் உருவ பொம்மையை எரித்ததாகக் கூறப்படுகிறது.
 
ஆனால், இந்த உருவபொம்மை எரிப்பு தொடர்பாக பல்கலைக் கழகத்தின் அனுமதி பெறவில்லை என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது,
 
ஆனால், உருவபொம்மையை எரித்ததாகக் கூறப்படும் மாணவர் அமைப்போ பல்கலைக்கழக வளாகத்திற்குள் இதுபோன்ற சம்பவங்கள் வழக்கமான ஒன்றுதான் என்று கூறியுள்ளது.
 
எனினும், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை ராவணன் போல் சித்தரித்து அவர்களது உருவபொம்மையை எரித்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, துணைவேந்தர் ஜகதேஷ் குமார் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்