நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து மோடி கூறுவது தவறான கருத்து - ஜெயராம் ரமேஷ்

திங்கள், 4 மே 2015 (21:28 IST)
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மருத்துவமனைகள், கல்லூரிகள் கட்டவும், சாலைகள் அமைக்கவும் அரசாங்கம் நிலத்தை கையகப்படுத்த முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி வருவது முற்றிலும் தவறானக் கருத்து என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
 
நிலம் கையகப்படுத்தும் சட்டம், கடந்த 2013 ஆம் ஆண்டு அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசு, பிற கட்சிகளை கலந்தாலோசிக்காமல் அவசரச் சட்டம் மூலம், இந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முயன்று வருகிறது.
 
இதற்கு சமாஜவாதி, பகுஜன் சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் மட்டுமின்றி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை, அகாலி தளம் ஆகிய கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தெரிவித்து வருகின்றன. எனவே, தற்போதைய நிலையில் இந்த அவசரச் சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்ற சாத்தியமில்லை என்றார் அவர்.
 
மேலும், காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நிலம் கையகச் சட்டத்தில் மருத்துவமனைகள், கல்லூரிகள் கட்டவும், சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அரசாங்கம் நிலத்தை கையகப்படுத்த முடியாது என்று பிரதமர் மோடி கூறி வருவது முற்றிலும் தவறானது. உண்மையில், பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கும் அரசு நிலத்தை கையகப்படுத்த இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. விவசாயிகளுக்கு எதிராகவும், நிலம் கையகச் சட்டத்தை நீர்த்துப்போகும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள திருத்த மசோதாவை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும் என்று ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்