”காஷ்மீர் வெள்ள நிலவரத்தை கையாள ராணுவத்தின் உதவி தேவை”: முப்தி முகமது சயீது

திங்கள், 30 மார்ச் 2015 (15:06 IST)
காஷ்மீரில் வெள்ள நிலவரத்தை கையாள ராணுவத்தின் உதவியை முதலமைச்சர் முப்தி முகமது சயீது கேட்டுள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மத்திய காஷ்மீரில் உள்ள பட்கம் மாவட்டம் சான்டினார் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இன்னும் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 
 
காஷ்மீரில் கனமழை காரணமாக ஜீலம் ஆறு அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
வெள்ளம் தொடர்பாக பீதி அடைய தேவையில்லை என்று ஜம்மு காஷ்மீர் துணை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மாநிலத்திற்கு சென்றுள்ளனர். மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காஷ்மீரில் வெள்ள நிலவரத்தை கையாள ராணுவத்தின் உதவியை முதலமைச்சர் முப்தி முகமது சயீது கேட்டுள்ளார். வெள்ள நிலவரத்தை கையாள, போதுமான படைகள், தொழில்நுட்ப கருவிகள் மற்றும் நிர்வாக உதவிகளை வழங்க ராணுவத்திடம் சயீது கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அடுத்த பக்கம்..

சயீது தலைமையில் நேற்று மாலை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணுவமும், வெள்ள நிலவரத்தை கையாள மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதிஅளித்துள்ளது என்று அரசு தரப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் செய்தியாளர்களிடம் பேசிய முப்தி முகமது சயீது, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து தேவையான நடவடிக்கையும் மாநில அரசு எடுக்கும். தொடர்ந்து நிலையை கண்காணித்து வருகிறோம். களத்தில் இறங்கி பணியாற்ற மற்றும் கண்காணிக்க அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்