ஜெயலலிதா வழக்கில் பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் - காங்கிரஸ்

சனி, 23 மே 2015 (20:03 IST)
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் அடிப்படை வழக்கை தொடர்ந்த பாஜக தலைவர்கள், தற்போது இந்த மேல்முறையீட்டு வழக்கினை தொடரும் பாரத்தை கர்நாடக அரசின் மீது சுமத்துவது ஏன்? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 
 
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான் ஜெய்ராம் ரமேஷ் பெங்களூருவில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 
 
கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறுபவர்களுக்கு ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அடிப்படையான வழக்கை தொடர்ந்தது பாஜக தலைவர்கள்தான் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். தற்போது இந்த மேல்முறையீட்டு வழக்கினை தொடரும் பாரத்தை எங்கள் மீது சுமத்தி, கர்நாடக மாநில அரசின் முதுகில் ஏறிஅமர்ந்து சவாரி செய்ய நினைப்பவர்கள் இது தொடர்பாக மோடியின் கருத்து என்ன? அருண் ஜெட்லி என்ன கூறுகிறார்? என்பதை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். 
 
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படிதான் கர்நாடக அரசு இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கை தொடர்ந்ததே கர்நாடக அரசுதான் என்பதைப்போல் உருவகப்படுத்தப்பட்டு வருகின்றது. கர்நாடக அரசு இந்த வழக்கை தொடரவில்லை, நாங்கள் சூழ்நிலைக்கு பலியாகியுள்ளோம். 
 
இந்த வழக்கை தொடர்ந்த சுப்பிரமணியசாமி தற்போது பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இன்று ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்பதை முதலில் தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்