ஜம்மு காஷ்மீரில் முதல்வரின் வீட்டருகே போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் கைது

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (15:47 IST)
ஜம்மு காஷ்மீரில் முதல்வரின் வீட்டருகே போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
தினக்கூலி மற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்; சம்பளத்தை தவறாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் தங்கள் தொகுதிகளில் உள்ள அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
 
அதன்படி, பொது சுகாதார பொறியியல் துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இன்று முதல்வர் உமர் அப்துல்லாவின் வீட்டை முற்றுகையிடுவதற்காக பேரணியாக சென்றனர். அவர்கள் சோன்வார் பகுதியை அடைந்து ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.
 
ஆனால், போராட்டத்தைக் கைவிட மறுத்த ஊழியர்கள், உயர்பாதுகாப்பு கொண்ட முதல்வரின் வீட்டை நோக்கி முன்னேறினர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்