நெருக்கடி நிலையை கொண்டுவருவது சாத்தியமில்லை - அருண் ஜேட்லி

புதன், 24 ஜூன் 2015 (16:17 IST)
தற்போதைய காலகட்டத்தில் நெருக்கடிநிலையை கொண்டுவருவது சாத்தியமானது இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி, ‘இந்தியாவில் மீண்டும் அவசரநிலை காலம் பிரகனப்படுத்தப்பட மாட்டாது என்று உறுதியாகக் கூற முடியாது’ என்று தெரிவித்திருந்தார். ஆட்சியில் இருக்கும் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரே இந்த கருத்தை கூறியதையடுத்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன.
 
இந்நிலையில், அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி இது குறித்து கூறுகையில், ”தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஜனநாயகத்தை ஆதரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நெருக்கடிநிலை போன்றவற்றின் மூலம் சர்வாதிகாரத்தை கொண்டுவர முடியாது.
 
ஊடகங்கள் பலம் வாய்ந்ததாக உள்ளன. ஆகையால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, சர்வாதிகார நாடாக இருப்பதை உலக நாடுகள் அனுமதிக்காது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது, பத்திரிகை தணிக்கை முறையும் சாத்தியப்படாது.
 
இணையதளங்களில் செய்திகள் ஒவ்வொரு நொடியும் பரவிக்கொண்டு இருக்கின்றது. அதை யாராலும் தடை செய்ய முடியாது. அப்போதைய நெருக்கடி நிலை காலகட்டத்தில் இருந்தது போல் தற்போது எதுவும் இல்லை.
 
அரசியலமைப்பு சட்டத்தின் சில விதிகளை பயன்படுத்தி ஊடகம், நீதித்துறை, காவல்துறை ஆகியவற்றை அகற்றிவிட்டு, இந்தியாவின் இருண்ட காலமான நெருக்கடிநிலை காலகட்டத்தை மீண்டும் இங்கு கொண்டுவருவதற்கு வாய்ப்பு கிடையாது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்