ஊரடங்கு உத்தரவை மீறி வந்து இந்து பெண்ணுக்கு உதவிய முஸ்லிம் ஆட்டோகாரர்!!
சனி, 18 மே 2019 (14:36 IST)
அசாம் மாநிலத்தில் ஹிலாகண்டி மாவட்டத்தில் கடந்த வாரம் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் மிகப்பெரும் வன்முறையானது.
இந்த மோதலில் வீடுகள், கடைகள் கொளுத்தப்பட்டன. ஆட்கள் பலர் தாக்கப்பட்டார்கள். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் ஹெய்லாகண்டியில் வசித்து வந்த இந்து மதத்தை சேர்ந்த ரூபன் தாஸ் என்பவரின் மனைவி நந்திதாவுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. ஆம்புலன்ஸிற்கு போன் செய்த போதும் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் வர இயலாது என கையை விரித்துவிட்டார்கள். அக்கம்பக்கத்தினரிடம் கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்பூல் என்கிற இஸ்லாமிய ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்துள்ளார். அவர்களது இக்கட்டான சூழலை கண்ட மக்பூல் ஊரடங்கு சட்டம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உடனடியாக அவர்கள் இருவரையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பல இன்னல்களுக்கு இடையில் பயணித்து அவர்களை பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
தற்போது அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்து, இருவரும் நலமாக இருக்கின்றனர். மருத்துவர்கள் கூறும்போது “கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் குழந்தைக்கு ஆபத்தாகியிருக்கும்” என்று தெரிவித்தார்கள்.
இந்து, இஸ்லாமிய பிரச்சைனைகள் இன்னும் பல பகுதிகளில் நடந்துகொண்டிருக்கிறது. பல அரசியல் கட்சி தலைவர்களும் கூட அதை தூபம் போட்டு வளர்த்துவிடுகின்றனர். அப்படிப்பட்ட இந்த காலத்திலும் “மனிதாபிமானத்துக்கு மதம் கிடையாது” என்னும் கருத்தை வலுக்க சொல்லியிருக்கிறது இந்த சம்பவம்.
இந்த செய்தி அறிந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி மோகனீஷ் மிஸ்ரா, டிஎஸ்பி கீர்த்தி ஜலி ஆகியோர் ஆட்டோ ஒட்டுனருக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து கௌரவப்படுத்தினார்கள்.