தலித்துகளுக்கு ஆதரவாக பேசுவது தேசத் துரோகமா? - மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி

செவ்வாய், 1 மார்ச் 2016 (10:52 IST)
மத்திய பாஜக அரசு, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை விட தான் மிகச்சிறந்த தேசபக்தன் என்று கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.
 

 
ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில், இது தொடர்பாக கூறியுள்ள கெஜ்ரிவால், "தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகளுக்கு ஆதரவாக தான் குரல் எழுப்பியதாகவும், இதன் காரணமாகவே பாஜகவினருக்கு தான் தேசத்துக்கு எதிரானவனாக பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் தனது குரலை நசுக்க முடியாது என்று கூறியுள்ள கெஜ்ரிவால், ஏழைகளுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் மோடிஜியை விட நான் மிகச்சிறந்த தேசபக்தன் என்று கூறியுள்ள அவர், நாட்டை பிளவுப்படுத்த வேண்டும் என முழக்க மிட்டவர்களை ஏன் இன்னும் பிரதமர் கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
“இதுபோன்ற கோஷங்களை எழுப்பியவர்கள் காஷ்மீரை சேர்ந்தவர்கள்; எனவே இவர்களை கைது செய்தால் மெஹபூபா முப்தி கோபம் அடைவார்; நமது வீரர்கள் ஒவ்வொரு நாளும் எல்லையில் வீர மரணம் அடைந்து வருகின்றனர்; ஆனால், காஷ்மீரில் ஆட்சி அமைப்பதற்காக தேச விரோத சக்திகளை மோடி அரசு பாதுகாக்கிறது” எனவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்