அவசர பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே, ரயில் புறப்படும் தினத்துக்கு முந்தைய நாள் தட்கல் சீட்டுகள் முன்பதிவு செய்யும் வசதியை வழங்கி வருகிறது. குளிர்சாதன வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது; குளிர்சாதன வசதி இல்லாத வகுப்புகளுக்கானது காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இந்தச் சேவைகள் ஐஆர்சிடிசி இணையதளம், மொபைல் செயலிகள் மற்றும் நேரடி முன்பதிவு நிலையங்களின் மூலமாக பெற முடியும்.
இந்நிலையில், தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முன்பதிவு நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, "முன்பதிவு நேரத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. பயணிகள் தவறான தகவல்களை பொருட்படுத்த வேண்டாம்" என்று ஐஆர்சிடிசி தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் தெரிவித்துள்ளது.