காங்கிரஸ் கட்சியையும் அரவணைத்துச் செல்வதே எங்கள் நோக்கம்: வெங்கையா நாயுடு

வெள்ளி, 27 நவம்பர் 2015 (09:53 IST)
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு 30 அரசியல் கட்சிகளின் ஆதரவு இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியையும் அரவணைத்துச் செல்வதே எங்கள் நோக்கம் என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்  வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.


 

 
சரக்கு மற்றும் சேவை வரியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மக்களின் மனநிலை, அதற்கு ஆதரவாகவே உள்ளது.
 
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 32 கட்சிகளில், 30 கட்சிகள், இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆகவே, மசோதா நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறோம்.
 
ஆயினும், காங்கிரஸ் கட்சியையும் அரவணைத்துச் செல்வதே எங்கள் நோக்கம். அதன் பதிலுக்காக காத்திருக்கிறோம். மக்களவையில் எதிர்க்காத காங்கிரஸ் கட்சி, அரசியல் காரணங்களுக்காக மேல்சபையில் எதிர்க்கிறது. இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்