இந்திராணி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்; மீண்டும் சிறையில் அடைப்பு

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (20:02 IST)
இந்திராணி முஹர்ஜியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

 
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தலைவராகப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. இந்திராணிக்கும் அவரது முதல் கணவர் சித்தார்த் தாஸூக்கும் ஷீனா போரா என்ற மகளும், மைக்கேல் போரா என்ற மகனும் பிறந்தனர்.
 
இந்நிலையில், ஷீனா போரா கடந்த 2012ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாகங்கள் மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் வனப்பகுதிக்குள் கண்டெடுக்கப்பட்டன. மர்ம நபர்கள் சிலர் ஷீனா போராவைக் கொலை செய்ததாத முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 
இந்நிலையில், இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுநர் ஷியாம் ராயை சந்தேகத்தின் பேரில் சில நாள்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.
 
அப்போது குடும்பத் தகராறு காரணமாக ஷீனா போராவை, இந்திராணி முகர்ஜியின் தூண்டுதலின் பேரில் தானும், சஞ்சீவ் கன்னாவும் இணைந்து கொலை செய்ததாக அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் இந்திராணி முகர்ஜி உள்பட மூன்று நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டதால் சுயநினைவை இழந்த இந்திராணி முகர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர அளித்தனர்.
 
தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
 
இது குறித்து மருத்துவமனை மூத்த அதிகாரியான டாக்டர் டி.பி.லகானே கூறுகையில், ”தற்போது இந்திராணி முஹர்ஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.
 
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு நாளை பிறப்பிக்கப்படவுள்ளது.
 
இந்திராணி தரப்பிலிருந்து அவரது வழக்கறிஞர் கஞ்ஜன் மங்களா, சி.பி.ஐ விசாரிப்பதில் இந்திராணிக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்