புதிய விதிகளின்படி, ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாகவே உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும்; தவறினால் ஒரு ரூபாய் கூட ரீஃபண்ட் கிடைக்காது. இதற்கு முன்பு இந்த கால அவகாசம் 4 மணி நேரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசி நேர டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்வதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் புறப்படுவதற்கு 8 முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50 சதவீதத் தொகையும், 24 முதல் 72 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால் 25 சதவீதத் தொகையும் பிடித்தம் செய்யப்படும். 72 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால் குறைந்தபட்ச ரத்து கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
அதேசமயம், காத்திருப்போர் பட்டியலில் இருந்து தானாக ரத்தாகும் டிக்கெட்டுகளுக்கு முழுத் தொகையும் திரும்ப கிடைக்கும். ரயில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தால், 'TDR' தாக்கல் செய்து முழு ரீஃபண்ட் பெறலாம். மேலும், போர்டிங் பாயிண்ட்டை ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை மாற்றிக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.