ஆபாச இணையதளங்களை தடை செய்ய இயலாது

சனி, 30 ஆகஸ்ட் 2014 (02:57 IST)
இணையத்தில் ஆபாச படங்களை அளிக்கும் 4 கோடி வலைத் தளங்கள் இருப்பதாகவும். இதில் ஒரு வலை தளத்தை முடக்கினால் 4 வலைத் தளங்கள் புதிதாக முளைப்பதாகவும், இந்த விடயத்தில் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இணையத்தில் ஆபாச படங்களை அளிக்கும் வலைத் தளங்களை முடக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கிலேயே அரசு இந்த பதிலை அளித்துள்ளது.
 
இணையதளத்தில் சிறார் ஆபாசப் படங்களை பார்ப்பது, தரவிறக்கம் செய்வது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். தணிக்கை செய்யப்பட்டு சான்றளிக்கப்படாத படங்களை பொது அரங்கில் காட்டுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
 
ஆனால் தனிமையில் வயதுவந்த ஒருவர், கணினியில் அவராக விரும்பி ஆபாசப் படங்களைப் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படாத நிலை இருக்கிறது என்று சென்னையில் இருந்து செயல்படும் சைபர் சோசைட்டி ஆப் இந்தியாவின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
 
இதுகுறித்த சட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்றும் சீனாவைப் போல இணைய சர்வர் கட்டமைப்புக்களை இந்தியாவும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்