2022இல் அனைவருக்கும் வீடு - இந்திய அரசு உறுதி

வியாழன், 10 ஜூலை 2014 (20:15 IST)
2022இல் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. 2014-15ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் அரசு இதனைத் தெரிவித்துள்ளது.

வீட்டுக் கடனுக்குக் கூடுதல் வரிச் சலுகை அளிப்பதன் மூலம் அரசு இதனைச் செயல்படுத்தும். இது மக்களை, முக்கியமாக இளைஞர்களைச் சொந்த வீடு வாங்க ஊக்குவிக்கும். 
 
தேசிய வீட்டு வசதி வங்கியில் குறைந்த விலையில் கட்டக்கூடிய மலிவு வீடுகள் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் நகரத்தில் உள்ள ஏழை மக்கள் அனைவரும் வீடு கட்டும் வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக 2014-15 மத்திய பட்ஜெட்டில் ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
 
இதனை மேலும் வலுப்படுத்த இந்தத் துறையில் அந்நிய முதலீட்டை எளிமையாக்கும் வழிகளை அரசு மேற்கொண்டுள்ளது. வேறு ஏதும் வழிகள் இருப்பின், அதனை ஆய்வு செய்யவும் அரசு தயாராக உள்ளது. மேலும், குடிசைப் பகுதி மேம்பாடு, நிறுவனச் சமூக பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அருண்ஜெட்லி கூறினார். இந்த நடவடிக்கை தனியார் நிறுவனங்களின் பங்கை அதிகரிக்கும் நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது. 
 
கிராம வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கிராம வீட்டு வசதிக் கடன் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெரும்பாலான கிராம மக்கள் பயன் பெற்றுள்ளனர். இதனை அடுத்து, நாட்டின் கிராமப்புற வீட்டு வசதிக்கு ஆதரவாக 2014-15ஆம் ஆண்டிற்குத் தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.8,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்