கறுப்பு பண பதுக்கலில் உலகளவில் இந்தியாவிற்கு நான்காவது இடம்

செவ்வாய், 16 டிசம்பர் 2014 (12:56 IST)
வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்பு பண பதுக்கலில் உலகளவில் இந்தியா நான்காவது நிலையில் உள்ளதாக உலகளாவிய நிதி நேர்மை மையம் தெரிவித்துள்ளது.
 
நிதி நேர்மை மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்தில் 28 லட்சம் கோடி ரூபாய்(439.59 பில்லியன் அமெரிக்க டாலர்) கறுப்பு பணம் இந்தியர்களால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த 10 ஆண்டுக்கான பட்டியலில் 1.25 ட்ரில்லியன் அமெரிக்க டாலருடன் சீனா முதலிடத்திலும், 973.86 பில்லியன் அமெரிக்க டாலருடன் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், 514.26 பில்லியன் அமெரிக்க டாலருடன் மெக்சிகோ மூன்றாவது இடத்திலும் உள்ளது. 
 
அதே போல் 2012 ஆம் ஆண்டு மட்டும் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு கறுப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டு இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இப்பட்டியலில் சுமார் 16 லட்சம் கோடி ரூபாயுடன் சீனா முதலிடத்தையும், அதற்கடுத்தபடியாக ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளது. 10 ஆண்டு பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த மெக்சிகோ 2012 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது.
 
2003 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு கால இடைவெளியில்,ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் இந்தியர்களால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்