வேகமாக வளர்ந்து வரும் சேவைத் துறையில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்

புதன், 9 ஜூலை 2014 (19:03 IST)
உலகில் சேவைத் துறையில் மிகவும் விரைவான வளர்ச்சி கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது. 2001 முதல் 2012 ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவின் ஆண்டு கூட்டு வளர்ச்சி வீதம் 9 சதவிதமாக இருந்தது. இதே காலத்தில் சீனாவின் வளர்ச்சி வீதம் 10.9 சதவிதமாகும். 2012 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறை பிரிவில் முதல் 15 நாடுகளின் பட்டியலில் இந்தியா 12ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையின் பங்கு 65.9 சதவீதமாகும். வேலை வாய்ப்பு 44 சதவீதமாகும். இந்தியாவில் இதே ஆண்டில் சேவைத் துறையின் பங்களிப்பு 56.9 சதவிதமாகவும், வேலை வாய்ப்பு 26.1 சதவிதமாக இருந்தன.
 
மொத்த உள்நாட்டு உற்பத்தி
 
2013-14ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையின் பங்களிப்பு 57 சதவிதமாகும். இது 2000-2001ஆம் ஆண்டைவிட 6 சதவிதம் கூடுதலாகும். இந்த ஆண்டில் வர்த்தகம், ஓட்டல்கள், விடுதிகள், போக்குவரத்து, சேமிப்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சி 3 சதவிதமாகக் குறைந்த போதிலும் நிதி, காப்பீடு, நில வர்த்தகம், வர்த்தகம் ஆகிய துறைகளின் வளர்ச்சி கணிசமாக அதிகரித்து 12.9 சதவிதத்தை எட்டியது. 
 
அன்னிய நேரடி முதலீடு
 
2013-14ஆம் ஆண்டு சேவைத் துறையில் அன்னிய நேரடி முதலீடு (கட்டுமானம் பணிகள் உட்பட 5 உயர் துறைகளில்) குறிப்பிடும்படியாக 37.6 சதவிகிதமாகக் குறைந்தது. இந்தக் காலக்கட்டத்தில் அன்னிய நேரடி முதலீட்டின் வளர்ச்சி 6.1 சதவிதமாக இருந்தது. இதன் விளைவாக மொத்த நேரடி அன்னிய முதலீட்டில் இந்த 5 உயர் துறைகளின் பங்களிப்பு கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்காகக் குறைந்தது.

ஏற்றுமதி
 
உலகளவில் சேவைத் துறை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. 1990ஆம் ஆண்டு 0.6 சதவிதமாக இருந்த இந்தப் பங்களிப்பு 2013இல் 3.3 சதவிதமாக அதிகரித்தது. இதை வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி விகிதத்தைவிட விரைவானதாகும். இந்தியாவின் சேவைத் துறையின் மொத்த ஏற்றுமதியில் மென்பொருள் சேவை ஏற்றுமதி 46 சதவிதமாக உள்ளது. இது 2013-14இல் 5.4 சதவிதம் குறைந்தது. 12 சதவிதமாக இருந்த சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் வீழ்ச்சி காணப்பட்டது.
 
2013-14ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் 57 சதவீத பங்கு, சேவை துறைகளைச் சார்ந்தது.
 
2013ஆம் ஆண்டில் உலக உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வரவில் இந்தியாவின் பங்கு 0.63 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 
2013-14ஆம் ஆண்டில் தகவல் தொழில் நுட்பத்தின்-வர்த்தக செயல் முறை மேலாண்மைத் துறை எதிர்பார்த்தபடி 10.3 சதவீத வளர்ச்சியை எட்டி 105 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டது.
 
மென்பொருள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைத் துறைகள், இந்தியாவிற்குச் சேவை துறையில் ஒரு நிலையான பெயரை நாட்ட ஊன்று கோலாக உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்