ஒரே ஒரு நபருக்காக காட்டுக்குள் வாக்குச்சாவடி அமைக்கும் தேர்தல் ஆணையம்

திங்கள், 21 ஏப்ரல் 2014 (15:20 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜுனகத் மாவட்டத்தில் பனெஜ் பகுதியில் வசிக்கும் ஒரு நபர் வாக்களிக்க வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது.  

குஜராத் மாநிலத்தில் கிர் வனப் பகுதியில் அதிக அளவில் சிங்கங்கள் காணப்படுகின்றன. கிர் வனப் பகுதிக்குள் இருக்கும் பனெஜ் பகுதியில் அறுபது வயது மதிக்கத்தக்க மஹந்த் பரத்தாஸ் தர்ஷன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார்.
 
இவர் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக இவருக்காக மட்டும் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது.        
 
இது தொடர்பாக பேசிய ஜுனகத் மாவட்ட ஆட்சியர் அலோக் குமார் பாண்டே, நாங்கள் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை தான் பின்பற்றுகிறோம். எந்த ஒரு  வாக்காளரும் வாக்களிக்க 2 கி.மி தூரதிற்கு   அதிகமான தூரம் பயணம் செய்யும் நிலை இருக்ககூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி, ஒரேஒரு நபருக்காக 5 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழு, இரண்டு வனப்பகுதி காவல்துறையினரின் பாதுகாப்போடு 35 கீ.மி காட்டுக்குள் சென்று வாக்குச்சாவடி அமைக்கவுள்ளனர் எனத் தெரிவித்தார். 
 
கடந்த 2004, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களிலும், 2007 மற்றும் 2012 ஆண்டுகள் நடைபெற்ற மாநில தேர்தல்களிலும் தர்ஷன்தாஸ் வாக்கை பெற அதிகாரிகள் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் காட்டுக்குள் சென்று, வாக்குச்சாவடி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்