சுங்க சாவடியை கடக்கும் வாகனங்கள் பாஸ்டேக் (FASTag) ஒட்டாமல் இருந்தால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு அவ்வழியே செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சுங்கக்கட்டணம் வசூலிக்க ஆகும் நேரம் தாமதம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர்களை காரின் முன்பக்க கண்ணாடியின் உள்பக்கமாக ஒட்டி வைத்திருந்தால் டோல் கேட்டை தாண்டும்போது தானாக சுங்க கட்டணம் அதிலிருந்து வசூலித்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் சில வாகனங்கள் காரில் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை ஒட்டாமல் வைத்துக் கொண்டு, சுங்க சாவடியை தாண்டும்போது மட்டும் கையில் எடுத்து காட்டுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு செய்வதால் மேலும் கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பாஸ்டேகை கார் கண்ணாடியில் ஒட்டாமல் வந்தால் அந்த வாகனங்களுக்கு சுங்க கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகையை அனைத்து சுங்க சாவடிகளிலும் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K