’மாணவியை நிர்வாணப்படுத்த விடாமல் தடுத்ததால் தாக்கப்பட்டேன்’ - தான்சானியா இளைஞர் வேதனை

வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (16:58 IST)
கர்நாடகாவில் தான்சானியா மாணவி கடுமையாக தாக்கப்பட்டு, அவரை நிர்வாணப்படுத்தியபோது உதவச் சென்றதற்காக நானும் தாக்கப்பட்டேன் என்று அந்நாட்டு இளைஞர் ஒருவர் கூறியுள்ளார்.
 

 
கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்துள்ள சோழ தேவனஹள்ளியில் சஃபானா தாஜ் (35) என்பவர், நடைபயிற்சி மேற்கொண்டபோது, காரில் வந்த சூடானைச் சேர்ந்த முகமது அஹாத் இஸ்மாயில் (21) என்ற கல்லூரி மாணவர் மோதினார். இதில், சஃபானா தாஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாணவர் இஸ்மாயில் மீது தாக்குதல் நடத்தினர். அங்கிருந்து தப்பியோடிய அவரை, துரத்தி, துரத்தி அடித்துள்ளனர். அச்சமயத்தில், அங்கு வந்த மற்றொரு வாகனத்தில் இஸ்மாயில் தப்பினார்.
 
மேலும், இஸ்மாயிலின் காரை தீயிட்டு கொளுத்தியதோடு, அவ்வழியாக சென்ற மற்ற ஆப்பிரிக்க மாணவர்கள் அனைவரையும், தாக்கியுள்ளர்.
 
இச்சம்பவம் நடைபெற்ற அரை மணி நேரத்தில், தான்சானியா நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி அவ்வழியாக சென்றுள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த கும்பல் அவர் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது. மேலும், அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியுள்ளது.
 

தாக்குதலில் சேதமடைந்த கார்...
 
இந்நிலையில், இத்தாக்குதலில் காயமடைந்த மற்றொரு மாணவர் ஒருவர் கூறுகையில், “அந்த மாணவி மீது தாக்குதல் நடந்தது குறித்த தகவல் எனக்கு கிடைத்தபொழுது உறவினர் வீட்டில் இருந்தேன். உடனே நான் அங்கு சென்றபோது, அங்கிருந்தவர்கள் காட்டுமிராண்டிதனமாக தாக்கிக்கொண்டு இருந்தனர்.
 
மேலும், அந்த மாணவியை 20 நிமிடங்களுக்கு மேலாக துரத்திச் சென்றனர். அவரது ஆடைகளை கிட்டத்தட்ட முழுமையாகவே கிழித்து விட்டனர். அந்த இடத்திலிருந்து அவரை தப்பிச்செல்ல வைக்க முயறிசித்தேன். இதனால், நானும் தாக்குதலுக்கு உள்ளானேன்.
 
நாங்கள் இருவருமே அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றோம். ஆனால், அவர்கள் எங்களை தப்பிக்க விடவில்லை. மண்டை உடைந்த நிலையில் அழுது கொண்டே, அங்கிருந்தவர்களின் வீடுகளை தட்டினோம்.
 
எனது சட்டையை அந்த மாணவிக்கு கொடுக்க முயற்சித்தேன். ஆனால், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்பெண்ணுக்கு கொடுக்கவிடாமல் தடுத்துவிட்டனர். உள்ளூர்காரர் ஒருவரும் தனது டி ஷர்ட்டைக் கொடுக்க முயற்சித்தார். அவரையும் அந்தக் கும்பல் தாக்கியது.
 
பின்னர், எங்கள் மீது இரக்கம் கொண்ட அப்பகுதி மக்களில் 4 பேர் எங்களை சுற்றி பாதுகாப்பு அரணமைத்து எங்களை காப்பாற்றினர். அவர்கள்தான் எங்களை மருத்துவமனையிலும் சேர்த்தனர்” இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்