ஹைதராபாத் கடத்தல் முயற்சி சம்பவம்: தலைமைக் காவலருக்கு போலீஸ் வலைவீச்சு

வியாழன், 20 நவம்பர் 2014 (20:19 IST)
ஹைதராபாத்தில் தொழிலதிபரை கடத்த முயன்ற சம்பவத்தில், முதல் குற்றவாளியாக கருதப்படும் தலைமைக் காவலரைப் பிடிக்க காவல்துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.
 
ஹைதராபாத்தில் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட தொழிலதிபரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்த முயன்றார். இந்தச் சம்பவத்தில் முதல் குற்றவாளியாக கருதப்படுபவர் அடையாளம் தெரிந்தது.
 
இந்தச் சம்பவத்தில் ஈடுப்பட்டது ஒபுலேசு என்ற தலைமைக் காவலர் என்பது தெரியவந்துள்ளது. ஒபுலேசு, இடது சாரி தீவிரவாதிகள் தடுப்புப் பிரிவில் பணியாற்றியவர். ஹைதராபாத் ஆயுதப் படையிலும் பணிபுரிந்திருக்கிறார். நித்யானந்தாவை கடத்தி மிரட்டி பணம் பறிக்க ஒபுலேசு மூன்று பேருடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
ஒபுலேசுவின் சொந்த ஊருக்கு தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளதாகவும், வெகு விரைவில் அவர் பிடிபடுவார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் துணைத் தலைவர் நித்யானந்த ரெட்டி (50). ஹைதராபாத்தில் வசித்து வரும் இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது சகோதரர் பிரசாத் ரெட்டியுடன் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கேபிஆர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
 
காலை 7.15 மணியளவில் நடைபயிற்சியை முடித்துக்கொண்ட அவர், தனது ஆடி காரில் ஏறி வீட்டுக்குப் புறப்படத் தயாரானார். தொழிலதிபர் அப்போது மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கி முனையில் கடத்த முயன்றார். ஆனால், நித்யானந்தா ரெட்டி சுதாரித்துக் கொண்டதால் ஏகே 47 ரக துப்பாக்கியை விட்டுவிட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்