உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இந்திய மசாலாப் பொருட்கள்: ஆராய்ச்சித் தகவல்

புதன், 25 ஜூன் 2014 (13:54 IST)
பக்க விளைவுகள் இல்லாமல் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான திறன் இந்திய மசாலாப் பொருட்களில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்திய சமையல் முறையில் உபயோகிக்கப்படும் சில வாசனை மற்றும் மசாலாப் பொருட்களை வெள்ளைத் தாமரை இதழ்களுடன் கலந்து பயன்படுத்தும்போது ரத்த அழுத்தம் குறைவதை சென்னை விஞ்ஞானிகள் சோதனையின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

ஏலக்காய், இஞ்சி, சீரகம், வால் மிளகு, வெந்தயம், அதிமதுரம் போன்ற பொருட்கள் கலந்த வெண்தாமரை சூரணம் என்ற சித்த மருந்தினை எலிகளிடத்தில் பரிசோதித்ததில் அவற்றின் ரத்த அழுத்தம் குறைந்தது நிரூபணமாயிற்று. அறிவியல் இதழ் ஒன்றில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த முடிவு வெளியிடப்பட்டது.

நகர்ப்புற நோயாளிகளிடம் மரபணு உயர் ரத்த அழுத்தத் தாக்கம் நான்கில் ஒருவர் என்ற விகிதத்தில் காணப்படுகின்றது. கிராமப்புறப் பகுதிகளில் 15 சதவிகிதத்தினர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆய்விற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இதய மருத்துவர் எஸ்.தணிகாச்சலம் இதுபற்றி கூறுகையில், "ஒவ்வொரு நோயாளியின் நோய் குறிப்புகளைப் பார்வையிடும்போதும் புகைத்தல், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடற்பருமன் ஆகிய நான்கு காரணங்களைத்தான் அடிக்கோடிடுவதாக உள்ளது.

பொதுவாக ஆங்கில மருந்துகளே இந்த நோயாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன. ஆனால் இவற்றின் விலை அதிகமாக இருப்பதாகவும், பக்க விளைவுகள் தோன்றுவதாகவும் பலரும் கருதுகின்றனர். இதனால்தான் பண்டைய இலக்கிய மருத்துவத்தில் இதற்கான தீர்வை ஆராய முடிவு செய்தோம்.

நாட்பட்ட நோய்த் தன்மையிலும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அதிகரித்துக் காணப்படும் உயர் ரத்த அழுத்த நோய் போன்ற நிலையிலும் இத்தகைய மருந்துகள் செயல்படுவது குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும். இதில் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்தால் லட்சக்கணக்கான மக்களின் நோய் தீருவதற்கு உரிய தீர்வு கிடைக்கும் " என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்