சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான கைது வாரண்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை

வியாழன், 2 ஜூலை 2015 (23:22 IST)
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக கீழமை நீதி மன்றம் பிறப்பித்த கைது வாரண்டுக்கு, உச்ச நீதி மன்றம் 6 வார கால தடை விதித்தது.
 

 
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி, அசாம் மாநிலம் காஜிரங்கா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது, இரு சமூக மக்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, கரீம்கஞ்ச் கூடுதல் ஜூடிசியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணையின் போது, சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்தது.
 
இதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக, ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்டை நிறைவேற்ற 6 வாரங்களுக்கு தடை விதித்தனர். மேலும், இந்த கால இடைவெளியில், சுப்பிரமணியன் சுவாமி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 
இந்த விவகாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்