ஊழலை ஒழிக்கக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - நரேந்திர மோடி

புதன், 20 ஆகஸ்ட் 2014 (09:40 IST)
ஹரியாணா மாநிலம் கைதாலில் நெடுஞ்சாலை திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஊழலை ஒழிக்கக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஹரியாணா மாநிலம், குருúக்ஷத்ர மாவட்டத்தில் உள்ள கைதாலில் தொடங்கி, ராஜஸ்தான் மாநிலம் வரை 166 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1,393 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அடிக்கல்லை நாட்டினார்.

பின்னர் நரேந்திர மோடி பேசியதாவது:-

“ஊழல், அபாயகரமானது. அது, புற்றுநோயை விட வேகமாக பரவும் தன்மைக் கொண்டது. நாட்டையே ஊழல் அழித்துவிடும். ஊழலை நீண்ட நாள்கள் சகித்துக் கொண்டிருக்க நாடு தயாராக இல்லை. ஆகையால், ஊழலை முழுமையாக ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தின உரையின்போது ஊழலுக்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை என சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை. அந்த விவகாரத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான், "எனக்கு என்ன கிடைக்கும்?, அதில் எனக்கு என்ன அக்கறை?' என்ற ஊழல் கலாசாரத்தால் நாடு சுரண்டப்படுகிறது என்று பேசினேன்.

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாமா? என்று நீங்கள் சொல்லுங்கள். எனக்கு உங்களது ஆசிகள் வேண்டும். உங்களது ஆசி இருந்தால், ஊழல் நோயில் இருந்து நாட்டை விடுவிப்பேன்.

மழைக் காலத்தின்போது, சாலைகள் காணாமல் போய்விடுகின்றன. இதனால் அரசுப் பணம் எங்குச் சென்றது என யாருக்கும் தெரியவில்லை. முறைகேடுகளில் ஈடுபடுபவர்களையும், ஊழல் புரிபவர்களையும் அரசு சகித்துக் கொண்டிருக்காது.

வளர்ச்சி ஏற்பட்டால்தான், நாடு முன்னேற்றமடையும். மேலும் வேலையில்லாத் திண்டாட்டம் உள்பட நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி ஏற்படும் பட்சத்தில், நாடு வேகமாக முன்னேற்றம் அடையும்.

வளர்ச்சி ஏற்பட்டால்தான் வேலைவாய்ப்புகள் உருவாகும். நாட்டில் வேகமாக வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், ரயில் பாதை, சாலைகள், விமானப் போக்குவரத்துப் பணிகள் ஆகியவற்றோடு கண்ணாடியிழைக் கம்பிவடம் பதிக்கும் பணிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

எரிவாயு, மின்சாரம், குடிநீர் தொகுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்கள் சென்றடைய வேண்டும்.

விவசாயிகளுக்காக ‘பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம்' என்னும் புதிய நீர்ப்பாசனத் திட்டத்தை எனது அரசு செயல்படுத்தும். இந்த நீர்ப்பாசன திட்டத்தின் மூலம், அனைத்து விவசாய நிலங்களுக்கும் தேவையான அளவு நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

ஹரியாணா மாநிலத்தின் மீது எனக்கு எப்போதும் தனி ஈடுபாடு உண்டு. குஜராத்தை விட ஹரியாணா மாநிலம் குறித்துதான் எனக்கு அதிகம் தெரியும். ஹரியாணாவில் பல ஆண்டுகளாக மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அந்தப் பணிகளை எனது அரசு மீண்டும் செயல்படுத்தும்“ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்