மகாராஷ்டிரா முதலமைச்சரும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறார்

வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (10:26 IST)
ஹரியானா முதலமைச்சர் பூபிந்தசிங் ஹூடாவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவானும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறார்.

ஹரியானா முதலமைச்சர் பூபிந்தசிங் ஹூடா, பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் கலந்து கொள்ள கடந்த சில தினங்களுக்கு முன் மறுத்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவானும் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாக்பூரில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மோடி கலந்துகொள்ள உள்ள இந்த விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சர் பிரித்விராஜ் சவான் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த முறை வருகை தந்த போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறேன் என்று பிரிதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கூட்டாட்சி அமைப்பு காயப்படுத்தப்படுகிறது. ஹூடாவும் இந்த முடிவைத்தான் எடுத்தார். சோலாப்பூரில் நடைபெற்ற விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

ஒரு மாநில முதலமைச்சரை கேவலப்படுத்தி பேசும்போது நரேந்திர மோடி எப்படி பார்த்துக்கொண்டு இருந்தார். இந்த கேவலமான வளர்ச்சி, எதிர்க்கட்சிகளுக்கு பாஜக ஒரு போதும் மதிப்பளிக்காது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது“ என்று தெரிவித்தார்.

நாக்பூரில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, பின்னர் மவுடா சிறப்பு அனல் மின் திட்டத்தை தொடங்கி வைத்தும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தையும் திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்