மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இனி பங்கேற்க மாட்டேன்: ஹரியானா முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா

புதன், 20 ஆகஸ்ட் 2014 (08:33 IST)
கூட்டத்தில் தன்னை எதிர்த்து கோஷமிடப்பட்டதால் ஆத்திரமடைந்த ஹரியானா முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, எதிர்காலத்தில் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

கைதாலில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் திட்ட தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஹூடா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரையும், ஹரியானா மாநில காங்கிரஸ் அரசையும் எதிர்த்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.

ஹூடாவை கண்டித்து கோஷமிட்டவர்களை அமைதி காக்குமாறு மோடி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் கூட்டத்தினர் ஹூடாவுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்தும் கூட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹூடா செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தச் சம்பவத்துக்கு பாஜகதான் காரணம். இது ஒரு அரசு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை பாஜக சிதைத்து விட்டது. ஆகையால், எதிர்காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க மாட்டேன்“ என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்