'புனித இடத்திற்குள் பெண்கள் செல்லலாம்' - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சனி, 27 ஆகஸ்ட் 2016 (14:59 IST)
ஹஜ் அலி தர்ஹாவின் புனித இடத்திற்குள் பெண்கள் செல்லலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
 

 
பாரதிய முஸ்லிம் மஹிளா அந்தோலன் அமைப்பைச் சேர்ந்த நூர்ஜஹான் நியாஸ், ஜாகியா சோமன் ஆகிய இரு பெண்கள், கடந்த 2014ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
 
அதில், பெண்கள் குழந்தைகளாக இருப்பது முதல் தர்காவுக்குச் செல்கின்றனர்; ஆனால்,2012-ஆம் ஆண்டு தர்ஹாவின் அறக்கட்டளையானது, திடீரென தர்ஹாவின் புனித இடத்திற்குள் பெண்கள் நுழைய தடை விதித்துள்ளது; எனவே, இந்த தடையை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
 
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அறங்காவலர்கள் தரப்பு, தர்ஹாவில் ஆண் முஸ்லிம் புனிதரின் கல்லறைக்கு அருகே பெண்கள் செல்வது இஸ்லாத்தில் மிகப்பெரிய பாவமாகக் கருதப்படுகிறது என்று தெரிவித்தனர்.
 
இந்நிலையில், நூர்ஜஹான் நியாஸ், ஜாகியா சோமன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் வி.எம். காண்டே மற்றும் ரேவதி மோஹித் டேரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, அறக்கட்டளையின் தடை உத்தரவானது, இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பாக இருக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஹஜ் அலி தர்ஹா புனித இடத்திற்குள் பெண்கள் நுழையலாம் என்று தீர்ப்பளித்தனர்.
 
எனினும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக தர்ஹா அறக்கட்டளை கூறியிருப்பதால், அதற்கு அவகாசம் வழங்கும் வகையில், தங்கள் உத்தரவை 6 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்