குஜராத்தில் பன்றிக்காய்ச்சலைத் தடுக்க 144 தடை உத்தரவு

புதன், 25 பிப்ரவரி 2015 (13:23 IST)
குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 237 பேர் பலியானதைத் தொடர்ந்த மேலும் இந்நோய் பரவாமல் தடுக்க  முன்னெச்சரிகை நடவடிக்கையாக அகமதாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய் தீவிரமாகப் பரவி வருகின்றது. குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இந்நோய் கடும் பாதிப்பை ஏற்டுத்தியுள்ளது.
 
இந்த பன்றிக் காய்ச்சலால் நாடு முழுவதும் இதுவரை 875 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
குஜராத் மாநிலத்தில், பன்றி காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அம்மாநில அரமச்சர் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் சபாநாயகருக்கும் இந்த நோய் அறிகுறிகள் உள்ளது.
 
இதுவரை குஜராத் மாநிலத்தில், பன்றி காய்ச்சலுக்கு 231 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 12 பேர் இறந்துள்ளனர். 3527 பேர் இந்த நோய் பாதிப்பில் உள்ளனர். மேலும், அகமதாபாத்தில் மட்டும் 50 பேர் உயிர் இழந்துள்ளனர். அங்கு ஒரே நாளில் 190 பேருக்கு இந்த நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க முன்எச்சரிகை நடவடிக்கையாக அகமதாபாத் மாவட்ட ஆட்சித்தலைவர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது இடங்களில் அனுமதியின்றி மக்கள் கூடுவதை தடுக்க இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
பலபேர் ஒன்று கூடும் இடங்களில் இருந்துதான், வாய் மற்றும் மூக்கு வழியாக இந்த நோய் பரவுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்