மருத்துவரை தாக்கிய வழக்கு: பாஜக எம்.பி.க்கு 3 ஆண்டு சிறை தண்டனை

வியாழன், 14 ஏப்ரல் 2016 (13:48 IST)
குஜராத்தில் அரசு மருத்துவரைத் தாக்கிய வழக்கில், பாஜக எம்.பி. நரன்பாய் கச்சாடியாவிற்கு அம்ரேலி அமர்வு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.


 

 
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அம்ரேலியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்த பாஜக தொண்டர், தனது உறவினருக்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர் பீம்ஜிபாய் தாபியிடம் கூறினார்.
 
அப்போது, வேறு ஒருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பதால், காத்திருமாறு அவர்களிடம் அந்த மருத்துவர் கூறினார்.
 
இதனால், ஆத்திரமடைந்த அந்தத் தொண்டர், பாஜக எம்.பி. நரன்பாயை தொலைபேசியில் அழைத்துள்ளார்.
 
அதைத் தொடர்ந்த அங்கு தனது உதவியாளர்களுடன் வந்த நரன்பாய் கச்சாடி, அந்த மருத்துவரைத் தாக்கியதுடன், அவரது ஜாதியைக் கூறி இழிவாகத் திட்டினார்.
 
இந்நிலையில், நரன்பாய் கச்சாடி மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டன.
 
பின்னர், வன்கொடுமை வழக்கில் இருந்து நரன்பாய் கச்சாடி விடுவிக்கப்படார். ஆனால், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, சட்ட விரோதமாக வன்முறையில் ஈடுபட்டது ஆகிய பிரிவுகளின் கீழ், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 
அத்துடன், அவரது கார் ஓட்டுனர் உட்பட மேலும் 4 நான்குபேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், நரன்பாய் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக, இந்த தண்டனையை ஒரு மாதகாலம் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்