சிறுமி கற்பழித்துக் கொலை: ஆத்திரமடைந்த மக்கள் காவல் துறை வாகனங்களை அடித்து நொறுக்கினர்

திங்கள், 24 நவம்பர் 2014 (08:57 IST)
மேற்கு வங்க சிறுமி பூடான் நாட்டில் கற்பழித்து கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய-பூடான் சாலையில் மறியல் போராட்டம் நடத்திய மக்கள், காவல் துறை வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
 
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஜல்பைகுரி பனாகட் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி வீட்டு வேலை செய்வதற்காக அருகில் உள்ள பூடான் நாட்டுக்குச் சென்றார்.
 
இந்நிலையில், அந்தச் சிறுமி இறந்து விட்டதாகக் கூறி, சிறுமியின் உடலை பூடான் நாட்டுக் காவல் துறையினர் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
 
இதனால், ஆதிதிரமடைந்த பனாகட் பகுதியைச் சேர்ந்த மக்கள், சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டனர். எனவே சிறுமி கற்பழிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்திய-பூடான் சாலை அமைந்துள்ள சாமுர்சியா பகுதியில் திரண்ட மக்கள், இந்த சம்பவத்துக்கு காரணமாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் தடுப்புகளையும் ஏற்படுத்தினார்கள்.
 
இதுபற்றிய தகவல் அறிந்து, அங்கு வந்த காவல் துறையினர், சாலை மறியலைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், மறியலில் ஈடுபட்டவர்கள் அதை ஏற்க மறுத்து காவல் துறையினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள்.
 
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகக் காவல் துறை உயரதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்