சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பெங்களூர் பள்ளி மீது வழக்கு

சனி, 25 அக்டோபர் 2014 (11:26 IST)
பெங்களூரில் 'ஆர்க்கிட்' பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் 10 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் அந்த பள்ளியின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
பெங்களூரை அடுத்துள்ள ஜாலஹள்ளியில், ஆர்க்கிட் இண்டர்நேஷனல் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த 4 வயது சிறுமி கடந்த 20 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் காவல்துறை வட்டாரம் கூறும்போது, ''சம்பவம் நடந்த பள்ளியில் 77 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 3 பேர் மட்டுமே ஆண்க‌ள். 17 வாகன ஓட்டுநர்களும் 10 அலுவலக உதவியாளர்களும் உள்ளனர்.
 
அலுவலக உதவியாளர் குன்டண்ணா (45), பள்ளியின் கடைநிலை ஊழியர்கள் 4 பேர், வேன் ஓட்டுநர்கள் 5 பேர் என மொத்தம் 10 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். 3 பேர் மீது சந்தேகம் வலுத்திருக்கிறது'' என்றனர்.
 
இதனிடையே அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 'ஆர்க்கிட் இண்டர்நேஷனல்' பள்ளியின் மீது காவல்துறையினர் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்