வெளிநாட்டு மாணவர்களைப் பல்கலைக் கழகங்களில் சேர்க்க அனுமதி பெறுவது கட்டாயம்: யுஜிசி உத்தரவு

சனி, 20 செப்டம்பர் 2014 (14:41 IST)
இந்தியப் பல்கலைக் கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது பல்கலைக் கழக மானியக் குழுவிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. 
 
இது குறித்து அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி செயலர் எஸ். ஜஸ்பால் சாந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 
அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
“சில பல்கலைக் கழகங்களும், இணைப்புக் கல்லூரிகளும் நேரடியாகவும், முகவர்கள் மூலமாகவும் தங்களுடைய கல்வித் திட்டங்களில் வெளிநாட்டினரைச் சேர்த்து வருகின்றனர்.
 
இந்த நடைமுறைகளில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியப் பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
 
அத்துடன், நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, இதுபோன்ற மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் பல்கலைக் கழகங்கள் இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் 
 
மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது பல்கலைக் கழக மானியக் குழுவிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும் என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்