வெளிநாட்டு நிறுவனங்களுடன் எந்த தொடர்பும் இல்லை: நடிகர் அமிதாப் பச்சன் விளக்கம்

புதன், 6 ஏப்ரல் 2016 (11:56 IST)
ரகசிய ஆவணங்களில் வெளியான வெளிநாட்டு நிறுவனங்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பிரபல நடிகர் அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.


 

 
அமெரிக்க நாடான பனாமாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மொசாக் போன்செகா என்ற சட்ட நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக தனிநபர்கள், நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை, வெளிநாட்டு நிறுவனங்களுடனான தொடர்பு மற்றும் ரகசிய வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை சேகரித்தது.
 
இந்நிலையில், இந்த ஆவணங்களை சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 100 செய்தியாளர்கள் "பனாமா ஆவணங்கள்" என்ற பெயரில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.
 
அதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினின் நெருங்கிய உதவியாளர்கள், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பத்தினர், பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி, ஆலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
 
இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகர் அமிதாப் பச்சன், அவருடைய மருமகளும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 500 பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
 
அமிதாப் பச்சன் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்த பணத்தை, பனாமா உள்ளிட்ட சில நாடுகளின் "ஷிப்பிங்" கம்பெனிகளில் முதலீடு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியானது.
 
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து அமிதாப் பச்சன் விளக்கமளித்துள்ளார்.
 
இது குறித்து அமிதாப் பச்சன் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
ஆவணங்களில் வெளியாகி உள்ள பல்க் ஷிப்பிங் கம்பெனி, லேடி ஷிப்பிங், டிரஷர் ஷிப்பிங், டிராம் ஷிப்பிங் என்ற கம்பெனிகள் எதையும் எனக்கு தெரியாது.
 
இந்த கம்பெனிகளுடன் எனக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை. இந்த கம்பெனிகளில் ஒருபோதும் நான் இயக்குனராக இருந்ததும் கிடையாது. இதில் எனது பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
வெளிநாடுகளில் நான் செலவு செய்த பணம் அனைத்துக்கும் முறைப்படி வரி செலுத்தி இருக்கிறேன். இதேபோல் வெளிநாட்டுக்கு அனுப்பிய பணத்துக்கும் தாராள மயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் சட்டத்துக்கு உட்பட்டு வரியை செலுத்தி உள்ளேன்.
 
அத்துடன் இந்த ஆவணத்தில் எனது தரப்பில் சட்டவிரோதமாக எந்த வித தவறும் நடந்ததாக குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு அமிதாப் பச்சன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்